புன்னகை செய்
தப்பில்லை.
ஆனால்
நான் சாலை கடக்கும் போது
வேண்டாமே,
கால்களுக்குக் கட்டளையிட மறந்து
மூர்ச்சையாகிறது
மூளை.
ஒவ்வொரு பாராட்டிலும்
கன்னம் சிவக்கும்
என் கவிதை,
உன் வெட்கத்தின் முன் மட்டும்
வெட்கித் தலை குனிக்கிறது.
உனைப்பார்க்கும் வரம் கொடு
கவிதை படிப்பதை
கிடப்பில் போடுகிறேன்.
உன்னுடன் பேசும் வரம் கொடு
இசைப்பேழையை
இருட்டில் வைக்கிறேன்.
உன் விரல் தீண்டும் வரம் கொடு
ஓவியம் வரைவதை
ஒத்தி வைக்கிறேன்.
நீயோ,
என் தவத்தை ரசிப்பதற்காகவே
வரம் தர மறுக்கிறாய்.
எந்த ஆடை அழகென
கேட்கிறாய்,
எந்த பூ எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி
கேட்பதாய்ப் படுகிறது
எனக்கு.
உனக்குப் பிடித்த ஆடையின்
வண்ணம்
கருப்பு என்று
தோழி சொன்னாள்.
என்கிறப்போது
முகம் பார்க்கும் கண்ணாடி
முக்கியமில்லாமல் போய்விட்டது
அன்பே
No comments:
Post a Comment